தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது


தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது
x
தினத்தந்தி 18 Feb 2018 4:00 AM IST (Updated: 18 Feb 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளையும், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழக டெல்டா விவசாயிகள் வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கருகி கொண்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு நியாயத்தின் அடிப்படையில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு பேரிடியும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி கர்நாடகா தண்ணீர் வழங்க வேண்டும். அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு விஷயத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது. தற்போதைய தீர்ப்பு தொடர்பாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என்று தமிழக அரசு சட்ட வல்லுனர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க வேண்டும். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று கூறுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல உள்ளது.

தமிழகத்தில் உணவுபொருட்கள் கலப்படம் உள்ளது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், உணவுபொருள் கலப்படம் என்பது ஆபத்தானது. அரசு இதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜவ்வரிசி, டீத்தூள் உள்ளிட்ட உணவுப்பொருட்களில் கலப்படம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தலைநகரான சென்னையில் நகைபறிப்பு சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பணிவுடன் கேட்டு அதில் நியாயத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்றிட வேண்டும். மின் நிறுத்தத்தால் சிறு, குறுந்தொழில்கள் பாதிப்படையும். பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக போராட்டமும் நடத்தி உள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்காத அரசாக இந்த தமிழக அரசு உள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை வஞ்சிக்க கூடிய அரசாக ஆளுங்கட்சி இருந்தால் அதற்கு மக்கள் இனி வரும் காலத்தில் ஆதரவு தர மாட்டார்கள். ரஜினி, கமல் போன்றவர்கள் புதிய கட்சிகளை தொடங்குவதாக அறிவித்துள்ளார்கள். அவர்கள் கட்சிகள் தொடங்கட்டும். கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை அறிவிக்கட்டும், பிறகு மக்களின் பிரச்சினைகளுக்காக முன் வர வேண்டும்.

தற்போது ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர். அது அல்லாமல் நடுத்தர வாக்காளர்களின் ஓட்டுகளை பெறவே அனைவரும் முயற்சி செய்கிறார்கள். புதிய கட்சிகள் தொடங்க, தொடங்க பழைய கட்சிகளுக்கு மவுசு தான். தமிழகத்தில் இனி கூட்டணி அமைக்காமல் யாரும் ஆட்சிக்கு வர இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், மாநில துணை செயலாளர்கள் காசிலிங்கம், தசரதன், இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் பழனிகுமார், நகர தலைவர் சத்தியநாராயணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story