போலீசாரின் அலட்சியத்தால் தொடரும் கொள்ளை சம்பவம்: சிவகாசி புறநகர் பகுதி மக்கள் பீதி


போலீசாரின் அலட்சியத்தால் தொடரும் கொள்ளை சம்பவம்: சிவகாசி புறநகர் பகுதி மக்கள் பீதி
x
தினத்தந்தி 18 Feb 2018 3:30 AM IST (Updated: 18 Feb 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தி முனையில் கொள்ளை நடந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி,

சிவகாசி புறநகர் பகுதியான சிவா நகர், ராஜாநகர், மகாத்மாகாந்தி நகர் ஆகிய பகுதிகளில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது. பகலில் இருசக்கர வாகனங்களில் வந்து பூட்டிக் கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு இரவு நேரங்களில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

நகை, பணம் பெரிய அளவில் பறிபோகாததால் அப்பகுதி மக்கள் மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் இருந்து வந்தனர். எனினும்திருட்டுக்கு பயந்து பலர் அந்த பகுதியில் இருந்து வீடுகளை காலி செய்து வெளியேற தொடங்கினர். புதிய நபர்கள் குடியிருக்க அஞ்சுகிறார்கள். இது குறித்து கடந்த 7-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

செய்தி வெளியிடப்பட்ட அன்று உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மல்லி போலீசார் சிவாநகர், ராஜா நகர், மகாத்மாகாந்தி நகர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வழக்கம் போல் அவர்கள் ரோந்து பணியின் போது சிவாநகர் உள்ளிட்ட சில பகுதிகளை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கொள்ளை நடக்கிறது.

சிவாநகர் பகுதியில் உள்ள வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிட்ட 2 பேர் வாடகைக்கு வசித்து வரும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் என்பவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ராஜமாணிக்கத்தின் மனைவி பூங்கொடியிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து மல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து வழக்கம்போல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி புறநகர் பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு எச்சரித்தும் அதை அலட்சியம் செய்ததால் தற்போது ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளைநடந்துள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தால் இந்த சம்பவத்தை தடுத்து இருக்கலாம். அதை போலீசார் அலட்சியம் செய்து மெத்தனமாக இருந்து விட்டனர். தொடரும் இந்த சம்பவங்களால் புறநகர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க சிவகாசி புறநகர் பகுதியில் ஒரு புதிய புறக்காவல் நிலையம் தொடங்க வேண்டும். சிவகாசி டவுன், மாரனேரி, மல்லி போலீசாரை அங்கு சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Next Story