பேஸ்புக் மீது குற்றச்சாட்டு


பேஸ்புக் மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Feb 2018 10:48 AM IST (Updated: 18 Feb 2018 10:48 AM IST)
t-max-icont-min-icon

பேஸ்புக் (முகநூல்) தொடங்கிய 45-வது நாளில் இருந்து அதில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் ஷான் பார்க்கர். இவரை சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனர் மார்க் பணி நீக்கம் செய்தார்.

பேஸ்புக்கை உருவாக்கியதில் ஷானின் பங்கு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் பேஸ்புக் மீது மிகப் பெரும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

பேஸ்புக் அதன் பயனாளிகள் அனைவரையும் கண்காணிக்கிறது. மக்களின் அனுமதியில்லாமல் இந்தக் காரியத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. பேஸ்புக் மக்களுக்கே தெரியாமல் ஏராளமான தீய வேலைகளை செய்து வருகிறது. இது கடவுளுக்கும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார். இவரது புகார் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டிய தகவல்களை விளம்பர நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்ததால் பேஸ்புக் நிறுவனத்துக்கு ஸ்பெயின் நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பு அபராதம் விதித்துள்ளது. பயனாளிகளின் தகவல்களை பாதுகாக்கத் தவறியதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக கூறியுள்ளது.

ஸ்பெயின் நாட்டு பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் பேஸ்புக் அவர்களிடமிருந்து, அந்த தகவல்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து தெளிவான ஒப்புதலோ அல்லது அது குறித்த தகவல்களோ அளிப்பதில்லை என்று தகவல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் இருந்து அவர்களது கருத்தியல், பாலினம், மத நம்பிக்கைகள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை திரட்டுகிறது. இந்த தகவல்களை எங்கு பயன்படுத்துகிறது அல்லது எதற்கு பயன்படுத்துகிறது என்கிற விவரங்களை தெளிவாக பயனாளிகளுக்கு அளிப்பதில்லை.

பேஸ்புக் நிறுவனம் தனிநபர் உரிமைகளை மீறுகிறது என்று கூறியுள்ள தகவல் பாதுகாப்பு அமைப்பு, “பொதுவான, தெளிவில்லாத விதிமுறைகளை பேஸ்புக் கொண்டுள்ளது. இது ஸ்பெயினின் தகவல் பாதுகாப்பு சட்ட விதிகள்படி தீவிரமான விதிமீறலாகும்” என்று கூறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் தகவல் பாதுகாப்புகள் சட்ட சிக்கல்களை உருவாக்கிவருகின்றன. இணையதள பயனாளிகளிடம் இருந்து மிகப் பெரிய அளவில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இந்த விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட விளம்பரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று அப்போது பேஸ்புக் கூறியிருந்தது.

ஒரு மாதத்தில் சராசரியாக 201 கோடி பயனாளிகள் பேஸ்புக்கை தீவிரமாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Next Story