அதிசய ஆபரேஷன் மருத்துவர்


அதிசய ஆபரேஷன் மருத்துவர்
x
தினத்தந்தி 18 Feb 2018 8:15 AM GMT (Updated: 18 Feb 2018 7:16 AM GMT)

உலகின் வயது முதிர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், ஆலோ லெவோஷ்கினா.

உலகின் வயது முதிர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், ஆலோ லெவோஷ்கினா. 89 வயதாகும் இவர் 68 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். முதுமைக்கான சுவடுகள் வெளிப்பட்டாலும் இளமை துடிப்புடன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்.

ரஷியாவின் மாஸ்கோ அருகில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆலோ சராசரியாக தினமும் 4 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய உயரம் நான்கு அடி 9 அங்குலம் மட்டுமே. குள்ளமாக இருப்பதால் அவரால் நோயாளிகளின் உடல் அருகில் சவுகரியமாக நின்று சிகிச்சை அளிக்க இயலாது. ஆனாலும் தள்ளாத வயதிலும் தடுமாற்றமின்றி நாற்காலியின் துணைகொண்டு கம்பீரமாக நின்று சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

‘‘மருத்துவ பணி என்பது தொழில் சார்ந்ததல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. மருத்துவ பணியில் முழு ஈடுபாட்டை செலுத்துவதை தவிர ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் நான் அறுவை சிகிச்சையில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை’’ என்கிறார்.

தினமும் காலையில் 8 மணி முதல் 11 மணி வரை கிளினிக்குக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அதன் பிறகு அறுவை சிகிச்சையை தொடங்குகிறார். பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தபோது டாக்டர்கள் பற்றிய நாவல் ஒன்றை படித்திருக்கிறார். அது மருத்துவ பணி மீதான ஈடுபாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் மருத்துவ படிப்புக்கு கடும் போட்டி நிலவியிருக்கிறது. கடுமையான போராட்டத்திற்கு பிறகு மாஸ்கோவில் உள்ள கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கிறார். ஆலோவிற்கு வருகிற மே மாதம் 5-ந்தேதி 90 வயது பிறக்கிறது.

Next Story