கவர்னருக்கு எதிர்ப்பு: தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்


கவர்னருக்கு எதிர்ப்பு: தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:30 AM IST (Updated: 19 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஆய்வுப்பணிக்கு வந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கவர்னருக்கு நிலக்கரி மாலை அணிவிக்க உள்ளதாக அறிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என எதிர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிட்டார். மேலும் ரேஷன் கடை, திடக்கழிவு மேலாண்மை உரப்பூங்கா ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக இந்த ஆய்வு மேற்கொள்வதற்காக நாகை சுற்றுலா மாளிகையில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் புறப்பட்டு வந்தார். வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோவில் அருகில் கவர்னர் கார் வந்தபோது, அங்கே கூடியிருந்த நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், கவர்னருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மதிவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் நகர செயலாளர் போலீஸ் பன்னீர், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் நாகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைக்கு வந்துவிடாமல் இருக்க இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் போடப்பட்டிருந்தது.

முன்னதாக காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இதை தடுக்க தவறிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கவர்னருக்கு நிலக்கரி மாலை அணிவித்து வரவேற்க உள்ளதாக இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீனை கைது செய்தனர். 

Next Story