தவசிமடையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
தவசிமடையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் கற்பகம் கொடியசைத்து வைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
மாடுபிடி வீரர்களும், காளைகளும் அடிபடாமல் இருப்பதற்காக மைதானம் முழுவதும் தேங்காய் நார் பரப்பப்பட்டு இருந்தது. முன்னதாக காளைகளுக்கு மண்டல கால்நடை இயக்குனர் சாமுவேல் ஜெபராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 432 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 134 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
களத்தில் துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இளைஞர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சளைக்காமல் இளைஞர்கள் காளைகளோடு மல்லுக்கட்டினர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கநாணயம், வெள்ளி நாணயம், பீரோ, சைக்கிள், கட்டில், குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். கொசவப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவக்குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த மதுரை பாலமேடுவை சேர்ந்த நாகேந்திரன் (வயது 21), குரும்பபட்டியை சேர்ந்த சின்னையன் (65), கோணப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (28), அலங்காநல்லூரை சேர்ந்த ராஜா (27), கவராயப்பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் (23), தேத்தாம்பட்டியை சேர்ந்த பிரசன்னா (31) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 7 இன்ஸ்பெக்டர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story