தீ விபத்தால் பாதிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்புக் குழுவினர் 2-ம் கட்ட ஆய்வு


தீ விபத்தால் பாதிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்புக் குழுவினர் 2-ம் கட்ட ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2018 10:45 PM GMT (Updated: 18 Feb 2018 7:46 PM GMT)

தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கோவிலுக்குள் இருந்த கடைகளால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சிற்பங்கள், தூண்கள் சேதம் அடைந்தன. இந்த இடிபாடுகளை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கோவிலில் முதல்கட்ட ஆய்வை முடித்து உள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி இடிபாடுகள் அகற்றப்பட்டு, மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்களுக்கு இரும்பு தூண் அமைத்து முட்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக சிறப்பு குழுவினர் நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்தனர். பின்னர் வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அதில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், செயல் அலுவலர் நடராஜன், தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தி, ஐ.ஐ.டி. பேராசிரியர் அருண்மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் முறை, அதற்கு தேவையான கற்களை எங்கு இருந்து கொண்டு வருவது போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விபத்து பாதிப்புகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக சேதமடைந்த தூண்களின் புகைப்படம் மற்றும் அளவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி சிறப்பான முறையில் முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பழைய தூண்களைப் போல சேதமடைந்த தூண்கள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கு பகுதியில் தான் பாதிப்பு உள்ளது. பழைய தூண்களை அகற்றும் போது, வேறு பாதிப்பு ஏற்படாமல் இருக்குமாறு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எப்போது முடியும் என்பது, அடுத்த ஆய்வின் போது தெரிவிக்கப்படும். கோவிலை சீரமைப்பதற்கு தேவையான நிதி உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story