திருமுல்லைவாயல் பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது


திருமுல்லைவாயல் பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2018 4:00 AM IST (Updated: 19 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயல் பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

திருமுல்லைவாயல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கும்படி துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீத்தாராம், புருஷோத்தமன் மற்றும் போலீசார் திருமுல்லைவாயல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை வில்லிவாக்கம் கக்கன்ஜி நகரைச்சேர்ந்த ஆறுமுகம் (வயது 24), ஜெய் என்ற ஜெயகாந்தன்(22), வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (33) என்பது தெரிந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் டாக்டர் மனோஜ்குமார் மற்றும் திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் உள்ள கிருஷ்ணராஜ் ஆகியோரின் வீட்டின் பூட்டை உடைத்து தலா 5 பவுன் நகைகளை திருடி உள்ளனர்.

மேலும் திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் ஏடி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர். அத்துடன் திருமுல்லைவாயல் எழில் நகரில் சாலையில் நடந்து சென்ற உமா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்துச்சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 12 பவுன் நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story