முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படுகின்றனர்


முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படுகின்றனர்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:30 AM IST (Updated: 19 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வின் ஏஜெண்டாக முதல் - அமைச்சரும், துணை முதல் - அமைச்சரும் செயல்படுகின்றனர் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் எல்.கே.எம்.பி. வாசு இல்லத்திருமண வரவேற்பு விழா ஆற்காட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். வாலாஜாவை அடுத்த சுங்கச் சாவடி அருகே அவரது கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் வாலாஜாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை முத்துக்கடையிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு வந்த டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடந்து கொள்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் வயல்கள் காய்ந்து போய் உள்ளன. எனவே மத்திய அரசு தலையிட்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதீய ஜனதாவின் ஏஜெண்டாக முதல் - அமைச்சரும், துணை முதல் - அமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி அதில் அறுதி பெரும்பான்மையானவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தான் நான் முதல் - அமைச்சர் ஆவேன். வருங்காலத்தில் எங்களது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். இந்த ஆட்சி போக வேண்டும் என்பதற்காக தான் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்தனர். இப்போது என்னைப்பற்றி அவதூறு பேசுகின்ற அமைச்சர்கள், வரும் தேர்தலில் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் டெபாசிட் கூட பெற மாட்டார்கள்.

மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்ததில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ளாத அளவிற்கு ஜெயலலிதா ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி. சி.கோபால், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஜெயந்தி பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் எம்.எஸ்.சந்திரசேகரன், கே.சிவசங்கரன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, தர்மலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Next Story