தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:45 AM IST (Updated: 19 Feb 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கி.வீரமணி கூறினார்.

கோவில்பட்டி,

தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி நகர திராவிடர் கழகம் சார்பில், கோவில்பட்டி லாயல்மில் காலனியில் நேற்று முன்தினம் மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெரியாரடியான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

வளர்ச்சி மட்டுமே என்று ஏமாற்றி மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி, 2019-ல் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்தினை மாற்றிவிட்டு மனுதர்மத்தினை புதிய அரசியல் சட்டமாக கொண்டு வர முயற்சிக்கப்படுகிறது. தற்போது சட்டவடிவில் இல்லாவிட்டாலும், நடைமுறையில் செயல்படுத்தி வருகின்றனர்.

பா.ஜனதா அடுத்த தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றால் இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி தான் நடக்கும். மக்கள், சினிமாக்காரர்கள் கூறுவதை கேட்டு அவர்கள் பின்னால் செல்லாமல், இன்றைய நிலையை சிந்திக்க வேண்டும்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன், பொது செயலாளர் ஜெயகுமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், அமைப்பு செயலாளர் செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி, கோவில்பட்டி நகர துணை தலைவர் கார்த்திக், நகர துணை செயலாளர் மாதவன், கோவில்பட்டி செயற்குழு உறுப்பினர் சுவாமிதாஸ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் இக்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி, ஆட்சியாக இல்லை. காட்சியாக உள்ளது. மத்திய அரசு தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலை மாறுவதற்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தான் முடிவு. அரசியல்வாதிகள் நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் தான் நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர்.

காவிரி நீர் பிரச்சினையில் நமக்கான நீர் குறைந்து உள்ளது. இந்த தீர்ப்பை விட, அதனை நடைமுறை படுத்த வேண்டிய அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் வரவேற்க கூடிய அம்சம் என்றால், 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், கணிகாணிப்பு குழு இரண்டையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பது தான். ஒடிசாவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டை தாக்கும் அளவிற்கு வந்துள்ளார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனை மக்கள் உணர வேண்டும்.

Next Story