ரூ.2 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


ரூ.2 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Feb 2018 10:30 PM GMT (Updated: 18 Feb 2018 10:14 PM GMT)

ராசிபுரத்தில், ரூ.2 கோடியில் வடிகால் வசதியுடன் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சரோஜா பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து செல்லும் புதுப்பாளையம் சாலை ராசிபுரம் நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஒரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டது. இந்த ஒரு வழிப்பாதையில்தான் புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் சென்று வந்தன.

இந்த நிலையில் ராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அதற்கான பணிகள் நகரம் முழுவதும் நடந்து வருகிறது. இதையொட்டி ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையிலும் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வந்தன. இதனால் அந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்பட்டது. தற்போது அந்த சாலை வழியாக கனரக போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை.

ராசிபுரத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, ராசிபுரம் - புதுப்பாளையம் ஒரு வழிப்பாதை சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைக்கவும், சாலையோரம் வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு வடிகால் வசதி அமைக்கவும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கினார். இதையொட்டி சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளும், சிறிய பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்தப் பணிகளை அமைச்சர் சரோஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சரோஜா சாலை பணிகளையும், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story