மாவட்ட செய்திகள்

செல்போன் கடை ஊழியர் படுகொலை மனைவி, மாமனார் தலைமறைவு + "||" + Cell phone shop employee slaughter Wife, father in law

செல்போன் கடை ஊழியர் படுகொலை மனைவி, மாமனார் தலைமறைவு

செல்போன் கடை ஊழியர் படுகொலை மனைவி, மாமனார் தலைமறைவு
ஆவடியில் செல்போன் கடை ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி, மாமனார் தலைமறைவாக உள்ளதால் அவர்களது மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
ஆவடி,

ஆவடி கோனாம்பேடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 37). போரூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு கமலி (6) என்ற மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.


பவித்ரா ஆவடி ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். அங்கு அந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற கோபால் பின்பு வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இந்த நிலையில் கோபால் நேற்று காலை ஆவடி எம்.ஜி.ஆர். நகரில் சாலையின் ஓரத்தில் தலை, கை, கழுத்து உள்ளிட்ட உடலின் பல இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது மோட்டார் சைக்கிள் உடலின் அருகே கீழே சாய்ந்து கிடந்தது. அருகில் பீர் பாட்டில்கள், டம்ளர், மசாலா பொடி கிடந்தது. அந்த மோட்டார் சைக்கிள் மீதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜூம் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து போலீசார் கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பல தகவல்கள் தெரியவந்தது.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் பவித்ரா தொடர்ந்த விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. ஆனால் விவாகரத்து தர கோபால் மறுத்து வந்ததாக தெரிகிறது. கடந்த மாதத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது கோபால் அங்கு சென்றார்.

அப்போது பவித்ராவின் தந்தை கோபாலிடம், ‘எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள். ஒழுங்காக விவாகரத்துக்கு ஒத்துக்கொள். இல்லையென்றால் அவ்வளவு தான்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் கொலை சம்பவம் நடந்த வேளையில் பவித்ராவின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பவித்ராவின் குடும்பம் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருவதாகவும், அவர்களை பிடித்து விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கோபாலை வேறு யாரும் கொலை செய்தனரா? நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட பிரச்சினையில் நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டினார்களா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.