ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2018 3:45 AM IST (Updated: 20 Feb 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் மூலம் சுமார் 120-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சொத்து பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவை கொண்டு வந்துள்ளதால் நிர்வாக சிக்கல், இணையதள பாதிப்பு, மற்றும் பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து காத்துக்கிடக்கின்றனர்.

அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது இத்தகைய நடைமுறையால் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் பதிவுக்கு செலுத்த வேண்டிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு தொகை போன்றவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தும்போது அது செலுத்துபவரின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால் அந்த கணக்கு சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கணக்கில் காட்டப்படாமல் உள்ளது. இதனால் பணம் செலுத்தியும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர நடைமுறை சிக்கல்களும் அதிகஅளவில் இருப்பதல் பத்திர எழுத்தர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்.எஸ்.மங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திர எழுத்தர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பத்திர எழுத்தர்கள் சாத்தையா, அமீர் சுல்தான், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சார்பதிவாளரிடம் வழங்கினர்.

இதேபோல ராமநாதபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம், பத்திர எழுத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயபாண்டியன், செயலாளர் அசன்அலியார், பத்திர எழுத்தர்கள் சங்க தலைவர் முத்துச்சாமி, செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க துணை தலைவர்கள் அன்புசெழியன், அபுதாகிர், பொருளாளர் செல்வம், செய்தி தொடர்பாளர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது உடனடியாக ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story