பாரம்பரிய மூலிகைகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


பாரம்பரிய மூலிகைகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 20 Feb 2018 3:15 AM IST (Updated: 20 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய மூலிகைகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் கூறினார்.

நெல்லை,

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் அரங்குகள் வைக்கப்பட்டு இருந்தன. சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவிகள், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும் தனியாக அரங்குகள் அமைத்து இருந்தனர். மொத்தம் 21 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அரியவகை மூலிகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றன.

3 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை 4 ஆயிரத்து 800 பேர் பார்த்து ரசித்தனர். அரங்குகள் அமைத்த பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

பின்னர் நடந்த கண்காட்சி நிறைவு விழாவில், நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளர் மாரிலெனின் மூலிகை கண்காட்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மூலிகைகள் அரங்குகள் வைத்து இருந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இங்கு நடைபெற்ற மூலிகை கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மற்றும் காணிகுடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அரங்குகள் அமைத்து இருந்தனர். நாம் கேள்விப்படாத பல அரியவகையான மூலிகைகள் இடம்பெற்று இருந்தன. இதை பார்க்கும் போது மூலிகை செடிகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது.

முன்னோர்கள் அரியவகை மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தினார்கள். நாம் தான் அந்த மூலிகைகளின் மருத்துவ குணங்களை தெரியாமல் போய் விட்டோம். பாரம்பரிய மூலிகைகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு வந்து இருக்கும் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் மூலிகைகளின் பயன்பாட்டை உலகத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதேபோல் கல்வி முறையிலும் மாற்றம் வேண்டும். பள்ளி பாடப்புத்தகங்களில் அரியவகையான மூலிகைகளை பற்றி குறிப்பிட வேண்டும். மூலிகை பற்றிய தேடல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வர வேண்டும். அப்படி வந்தால் தான், சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

மாவட்ட அறிவியல் மைய உதவியாளர் பொன்னரசன் நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அறிவியல் மையம் செய்து இருந்தது.

Next Story