ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு


ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2018 3:30 AM IST (Updated: 20 Feb 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கடலூரில் நடந்த அ.தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கடலூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நகர, வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் சார்பு அணி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நடந்தது. நகர செயலாளர் குமரன் வரவேற்றார். அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமாரசாமி, பழனிச்சாமி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பெருமாள்ராஜா, விவசாய அணி காசிநாதன், மகளிரணி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் அரசு சார்பில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதை அவரது பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார். இது தவிர தலைமை செயலகத்தில் ஜெயலலிதா வெண்கல சிலை நிறுவப்படுகிறது. அவரது சமாதியில் மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

ஜெயலலிதா பிறந்த நாளை வீடுகள் தோறும் கொண்டாட வேண்டும். கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் 3 விழாக்கள் நடக்கிறது. முதலில் பொதுக்கூட்டம் நடத்தி, அதில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, 2-வது மாசி மகத்தில் அன்னதானம் வழங்குவது, 3-வது மருத்துவ முகாம் நடத்துகிறோம். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அது தான் முக்கியம்.

அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தான் நாம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியும். உறுப்பினர் சேர்க்கையை முடித்து விட்டு வருகிற 25-ந்தேதி ஒப்படைக்க வேண்டும். பிரிவினை உள்ளது. அதில் நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கட்சியை தொடங்க உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு இடம் கொடுக்காமல் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து வெளியே சென்றவர்களுக்கு உரிய பாடத்தை கற்பிக்க வேண்டும். இந்த ஆண்டு நிர்பந்த ஆண்டாக இருக்கிறது. உள்ளாட்சி, கூட்டுறவு தேர்தல் வர இருக்கிறது. 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும். இயக்கத்துக்கு சவால் வந்துள்ளது. இதில் நமது இயக்கம் தான் வெற்றி பெற்றது என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

Next Story