கலெக்டர் அலுவலகத்தில், பெண் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில், பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Feb 2018 3:15 AM IST (Updated: 20 Feb 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

நிலம் வாங்குவதற்காக கொடுத்த ரூ.30 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில், பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூரை சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மனைவி பாலம்மாள்(வயது 45). இவர் நேற்று காலை தனது கணவருடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாலம்மாளை மீட்டனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாலம்மாள் மேலஆத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிலம் வாங்குவதற்காக கொஞ்சம், கொஞ்சமாக ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்து இருந்தார். ஆனால் இதுவரை அந்த பெண் நிலத்தை வாங்கி தரவில்லை. இதனால் அந்த பெண்ணிடம் கொடுத்த பணத்தை பாலம்மாள் திருப்பி கேட்டார். அப்போது அந்த பெண் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால், நிலம் வாங்கி தருவதாக கூறி அந்த பெண் ரூ.30 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக பாலம்மாள் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், மனம் உடைந்த அவர், கணவர் செல்லப்பாவுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அந்த அலுவலக வளாகத்தில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு பாலம்மாள் தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவரையும், கணவர் செல்லப்பாவையும் சிப்காட் போலீசார் மேல்விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Next Story