ஊட்டி அப்பர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் மனு


ஊட்டி அப்பர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Feb 2018 9:30 PM GMT (Updated: 19 Feb 2018 7:48 PM GMT)

ஊட்டி அப்பர் பஜாரில் கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதன்படி, தும்மனட்டி கிராமத்துக்கு உட்பட்ட பேரார் பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து கொடுக்கக்கோரி கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பேரார் அய்யன்தோட்டம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊற்று தண்ணீரை குடத்தில் எடுத்துக்கொண்டு, அதனை வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. தற்போது அப்பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அங்கு சென்று தண்ணீர் எடுக்க முடியவில்லை. எனவே, குடிநீர் குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜெயின் ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜா சங்க தலைவர் மால்க் சந்த் மற்றும் பெண்கள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

ஊட்டி அப்பர் பஜாரில் அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களிடம், டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தி விட்டு செல்லும் குடிமகன்கள் தகராறு செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர் ஆகவே, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story