தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை


தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 20 Feb 2018 4:15 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பேர்நீதிஆழ்வார் தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அபிமன்னன், மாலதி, சுரேஷ், வசந்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமையில் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

நாஞ்சிக்கேட்டை ஊராட்சியில், தனிநபர் கழிவறை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வட்டார வளர்ச்சி அதிகாரி சூரியநாராயணன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

முன்னதாக பொதுமக்கள் சார்பில் பேர்நீதிஆழ்வார், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தனிநபர் கழிவறை கட்டினால் அரசு ரூ.12 ஆயிரத்து 500 மானியம் வழங்கும் என கூறியதன் அடிப்படையில் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் கழிவறை கட்டினர். கட்டும்போது ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக பொதுமக்களிடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்தனர். ஆனால் மானியத்தொகை ஒரு சிலருக்குத்தான் கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை. 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணம் கிடைக்கவில்லை.

மேலும் கழிவறை கட்டிடத்தின் மேல் பயனாளிகளின் பெயர் மற்றும் ஊராட்சியின் பெயர், திட்டத்தின் மதிப்பீடு தொகை எழுதப்பட்டுள்ளது. இது குறித்தும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

எனவே முழுமையாக பணம் கிடைக்காத பயனாளிகளுக்கு உடனடியாக கழிவறை கட்டிய நிதி கிடைத்திட வழிவகை செய்திடவும், முறைகேடுகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story