மாவட்ட செய்திகள்

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான தொகை கிடைக்க தாமதம் விவசாயிகள் கவலை + "||" + The farmers are worried about the delayed payment of the paddy in the government procurement centers

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான தொகை கிடைக்க தாமதம் விவசாயிகள் கவலை

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான தொகை கிடைக்க தாமதம் விவசாயிகள் கவலை
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான தொகை கிடைக்க தாமதமாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாய்மேடு,

நாகை மாவட்டத்தில் நடைபெறும் நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணை நீர் தான் பிரதானம். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததால், நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது. கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகிறார்கள்.


நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் இளம் கதிர்கள் தண்ணீரின்றி வாடின. இந்த காரணங்களால் நாகை மாவட்டத்தில் சம்பா நெல் மகசூல் குறைவாகவே உள்ளது.

நாகை மாவட்டத்தில் சம்பா பருவத்தையொட்டி 213 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு வங்கி மூலமாக பணம் வழங்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாகை மாவட்டத்தில் பரவலாக அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கொள்முதல் நிலையங்களை நாடி செல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட நெல் மூட்டை ரூ.664-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை வங்கி மூலமாக கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வாய்மேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் அறுவடை முடிந்து தொடர்ந்து 2 நாட்களுக்கு நெல்லை காய வைக்க வேண்டி உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் வங்கி கணக்கில் வரவு வைக்க 10 நாட்கள் வரை ஆகிறது. நெல்லுக்கான தொகை கிடைக்க தாமதமாவதால், சாகுபடிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதனால் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறோம். நெல்லுக்கான தொகையை வங்கியில் வரவு வைப்பதற்கு பதிலாக, கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகளிடம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.