முன்கூட்டியே முடிவுக்கு வந்த மீன்பிடி சீசன் சொந்த ஊருக்கு திரும்பும் மீனவர்கள்


முன்கூட்டியே முடிவுக்கு வந்த மீன்பிடி சீசன் சொந்த ஊருக்கு திரும்பும் மீனவர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2018 4:30 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரையில் மீன்பிடி சீசன் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதனால் மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல தொடங்கினர்.

வேதாரண்யம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், தூத்துக்குடி, காரைக்கால், ராமேசுவரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரை வந்து தங்கியிருந்து மீன் பிடிப்பது வழக்கம் ஆகும்.

இந்த ஆறு மாதம் சீசன் காலத்தில் மீனவர்கள் வலையில்் வாலை மீன், மயில் மீன், கணவாய், திருக்கை, வஞ்சிரம் மீன்களும், நண்டு, இறால் ஆகியவையும் அதிக அளவில் கிடைக்கும். மேலும் வழக்கமாக கோடியக்கரையில் இருந்து மீன்கள் பிடிக்கப்பட்டு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கோடியக்கரையில் நாள்தோறும் மீன் வாங்குவதற்கு பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள். இந்த சீசன் காலத்தில் தற்போது மீன்கள் குறைவாகவே கிடைத்தன. அதிகவிலைக்கு போகும் காலா, ஷீலா, வாவல், நீலக்கலர் நண்டு, பெரிய இறால் வகைகள் அதிக அளவில் கிடைக்கவில்லை.

மாறாக பன்னா, பூவாளி, போத்தல், தண்ணீர்பன்னா, புள்ளி நண்டு, படங்கன், லாப்ஸ்டார் வகைகள் மட்டுமே கிடைத்தன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு வழக்கமாக சீசன் காலத்தில் நூறு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். ஆனால் பல்வேறு இயற்கை மாற்றங்கள், கடலில் காற்று நீரோட்டம் மாறுதல், நீண்ட தூரம் மீன்பிடிக்க செல்ல முடியாதது, புயல், மழை என பல்வேறு காரணங்களால் நான்கு மாதம் கூட முழுமையாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் இந்த ஆண்டு இலங்கை ராணுவத்தினர் அதிக அளவில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த சம்பவங்கள் நடந்ததால் மீனவர்களால், நிம்மதியாக மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உச்சகட்டமாக சிங்கள மீனவர்கள், தமிழக மீனவர்களை தாக்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன் மற்றும் வலைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படை தாக்குதலை வெளியில் சொல்ல முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டனர். காரணம், தாக்குதல் குறித்து தகவல் சொன்னால் மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்களை கடுமையாக தாக்கி படகுடன் சிறைபிடிப்பார்கள் என்று பயந்து வெளியில் கூறாமலேயே பயந்து கொண்டு மீன் பிடித்தனர். இதனால் இந்த ஆறு மாத சீசன் காலத்தில் பாதி அளவான ஐம்பது கோடிக்கு குறைவாகவே மீன் வர்த்தகம் நடைபெற்றது.

தற்போது மீன்கள் அதிகம் கிடைக்காததால் டீசல் செலவு மற்றும் ஆள் கூலிக்குகூட கட்டுப்படியாகாததால் மீனவர்கள் சீசன் முடியும் முன்பே தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி விட்டனர். பெரும்பாலான மீனவர்கள் ஊருக்கு சென்று விட்ட நிலையில் பரப்பரப்பாக இயங்கி வந்த கோடியக்கரை ம்ீன்பிடிதளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பொதுவாக இந்த வருட மீன்பிடி சீசன் மந்தமாகவே இருந்தது என மீனவர்கள் கருத்து தெரிவித்தனர். 

Next Story