மாவட்ட செய்திகள்

கோவில் இடத்தை மீட்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் சிறை பிடிப்பு + "||" + The officers of the Department of Armed Forces have been jailed for recovering the temple

கோவில் இடத்தை மீட்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் சிறை பிடிப்பு

கோவில் இடத்தை மீட்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் சிறை பிடிப்பு
கும்பகோணத்தில் கோவில் இடத்தை மீட்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர். போலீசாருக்கும், கடைக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளம் வடக்கு கரையில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான காலசந்தி கட்டளை மண்டபம் உள்ளது. கும்பேஸ்வரர், மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி முடித்த பின்பு குளத்திற்கு எதிரில் உள்ள இந்த மண்டபத்திற்கு வந்து இளைப்பாறி விட்டு பின்னர்் அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாக வந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.


இத்தகைய சிறப்பு பெற்ற மண்டபத்தின் ஒரு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக ராமய்யர் என்பவர் கடை வைத்து இருந்து வந்தார். பின்னர் பெருமாள் மகன் முருகேசன், ராமய்யரிடம் இருந்து உள்வாடகைக்கு அந்த கடையை எடுத்து அதில் புத்தக கடை, அரிசிக்கடை, கணினி மையம் ஆகியவற்றை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மகாமகத்தின்போது அறநிலையத்துறையினர் மண்டபத்தில் உள்ள கடையை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால் முருகேசன், கடையை காலி செய்யாததால் அறநிலையத்துறையினர் அப்போதே அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். ஆனால் முருகேசன், அந்த கடையில் அறநிலையத்துறையினர்் பூட்டி ‘சீல்’் வைத்திருந்ததை அனுமதியின்றி உடைத்து மீண்டும் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் வருவாய் நீதிமன்ற தீர்ப்பாயத்தில், முருகேசன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த அதிகாரிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். பின்னர் முருகேசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அறநிலையத்துறை செயலாளர், 2 வாரத்தில் விசாரணை செய்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்பேரில் கடந்த நவம்பர்் மாதம் 11-ந் தேதி அந்த கடையை அகற்ற வேண்டும் என அறநிலையத்துறை செயலாளர் ஒரு அரசாணையை வெளியிட்டார். இதனையடுத்து மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் நேற்று முன்தினம் மண்டபத்தில் உள்ள கடையை மீட்க வேண்டும். கடை பூட்டப்பட்டு இருந்தால் பூட்டை உடைத்து மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து நேற்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர்(பொறுப்பு) சிவராம்குமார் தலைமையில், செயல் அலுவலர்கள் கவிதா, நிர்மலாதேவி, ஆசைத்தம்பி, சரண்யா, கலைவாணி, ஆய்வாளர்கள் சுதா, கவியரசு, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கடையை மீட்பதற்காக வந்தனர்.

ஆனால் அந்த கடையில் ஒரு பணியாளர் மட்டுமே இருந்தார்். உரிமையாளர் இல்லை. இதையடுத்து கடையில் உள்ள புத்தகங்களை உதவி ஆணையர், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் வெளியில் எடுத்து வந்து சாலையில் வைத்தனர்.

உடனே கடையின் பணியாளர், இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்். தகவல் அறிந்து கடைக்கு வந்த முருகேசனின் சகோதரர்கள் வெங்கடேசன் மற்றும் செல்லதம்பி ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகள், கடையை காலி செய்வதை பார்த்து அவர்்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அறநிலையத்துறை அதிகாரிகளை கடைக்குள் வைத்து கதவினை இழுத்து மூடி அவர்களை சிறைபிடித்தனர். இதனால் கடைக்குள் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். வெங்கடேசன், செல்லதம்பி ஆகியோர்் அதிகாரிகளை வெளியில் விட மறுத்ததால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கடைக்குள் இருந்த அதிகாரிகளை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்். இதனால் போலீசாருக்கும், கடைகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடைக்காரர்கள், கடையை பூட்டுவது குறித்து நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறினார்கள். அதற்கு அறநிலையத்துறையினர், நகலை காட்டுங்கள் நாங்கள் சென்று விடுகிறோம் என்று கடை முன்பு நின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசமூர்த்தி, 30 நிமிடங்களில் கடையை காலி செய்ய வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு கால அவகாசம் கொடுத்தார்். ஆனால் அதன்படி அவர்்கள், கடையை காலி செய்யாததால் அங்கு நின்ற அறநிலையத்துறையினர் மீண்டும் கடையை ‘சீல்’ வைக்க சென்றனர்.

ஆனால் ‘சீல்’ வைக்க முடியாதபடி செல்லதம்பி கடைக்குள் நின்று கொண்டு வெளியில் வர மறுத்தார். இந்த நிலையில் பெட்ரோல் கேனுடன் வந்த வெங்கடேசன், கடைக்கு முன்பு நின்று கொண்டு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார், பாய்ந்து சென்று அவரது கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்து அவர்் மீது தண்ணீரை ஊற்றினர்்.

அப்போது செல்லதம்பி மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் அறநிலையத்துறையினர் அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர்். இந்த சம்பவத்தால் மகாமக குளக்கரையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார் கூறுகையில், காலசந்தி கட்டளை மண்டபத்தில் இருந்த கடையை மீட்க சென்றோம். கடைக்குள் இருந்தபோது அங்கிருந்த 2 பேர் என்னையும், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை கடைக்குள் வைத்து பூட்டினார்கள். அதன் பிறகு போலீசார் வந்து எங்களை மீட்டெடுத்தனர் என்றார்.

இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கவிதா கூறுகையில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, உள்ளே வைத்து பூட்டியது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.