மாவட்ட செய்திகள்

போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு + "||" + 4 pound jewelry flush with an actress like the police

போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம்  4 பவுன் நகை பறிப்பு
சுசீந்திரத்தில் போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவரது மனைவி உமையம்மாள் (வயது 72). இவர் சுசீந்திரம் கோவிலில் சாமி கும்பிட சென்றார். சுசீந்திரம் சன்னதி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, டிப்–டாப் உடை அணிந்த 2 நபர்கள் உமையம்மாளை வழிமறித்தனர். அவர்கள் உமையம்மாளிடம் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர்.


தொடர்ந்து, இந்த பகுதியில் வழிப்பறி திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், கழுத்தில் நகை கிடப்பதை பார்த்தால் திருடர்கள் பறித்து சென்று விடுவார்கள் என்றும் எச்சரித்தனர். மேலும், நகை திருட்டு போகாமல் இருக்க அதை பார்சல் செய்து தருகிறோம். அந்த நகையை பத்திரமாக கையில் வைத்திருங்கள். வீட்டுக்கு சென்ற பின்பு, பார்சலை பிரித்து நகையை எடுத்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறினர்.

இதை கேட்டதும், அந்த நபர்கள் மீது நம்பிக்கை கொண்ட உமையம்மாள், தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை பார்சல் செய்து கொடுப்பது போல் நடித்து, வேறொரு பார்சலை உமையம்மாள் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

அவர்கள் சென்று பின்பு சிறிது நேரம் கடந்து உமையம்மாளுக்கு தனது கையில் இருந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் பார்சலை திறந்து பார்த்தார். அப்போது, அதில் நகைக்கு பதிலாக சிறு சிறு கற்கள் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டு நகை பறிக்கப்பட்டதை உணர்ந்த உமையம்மாள் கதறி அழுதார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

இந்த நூதன திருட்டு குறித்து உமையம்மாள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.