இந்தியாவிலேயே விலையில்லா அரிசி வழங்கும் மாநிலம் தமிழகம் மட்டும் தான் செல்லூர் ராஜூ பேச்சு


இந்தியாவிலேயே விலையில்லா அரிசி வழங்கும் மாநிலம் தமிழகம் மட்டும் தான் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2018 4:30 AM IST (Updated: 20 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே விலையில்லா அரிசி வழங்கும் மாநிலம் தமிழகம் மடடும் தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் கூட்டுறவுத்துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், வனரோஜா எம்.பி., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய வங்கி கிளையை திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து 480 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் மகளிர் தொழில் முனைவோர் கடன், பணிபுரியம் மகளிர் கடன், சிறுவணிகக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர்குழு நேரடிக் கடன், மத்திய காலக் கடன், பயிர்க் கடன் ஆகிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய இணையதள சேவையினை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஜவ்வாதுமலை கோடை விழாவில், எண்ணிடம் வைக்கப்பட்ட கோரிக்கையான ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 30-வது புதிய கிளை திருவண்ணாமலை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா அரசு அமைந்த பிறகுதான் பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்திய துணை கண்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் மட்டும் தான் கூட்டுறவு துறையின் செயல்பாடுகளுக்காக தேசிய அளவில் 21 விருதுகள் பெற்றுள்ளன. தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டு இன்று மிகச்சிறந்த சேவையை செய்து வருகிறது.

ஜவ்வாதுமலை கூட்டுறவு சங்கம் மூலம் மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக சாமை, தேன், புளி ஆகிய தொழில் புரிவதற்கு சிறுவணிக கடனுதவி வழங்கியதன் மூலம் ரூ.1 கோடியே 30 லட்சம் விற்பனை செய்து, இந்த ஒரு சங்கம் மட்டும் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளனர். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 74 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே விலையில்லா அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான். ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 2,030 குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தற்போது உள்ள நடமாடும் கடைகளை விட, கூடுதலாக நடமாடும் கடைகள் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் இதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பாரதி பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் வே.நந்தகுமார், முன்னாள் வணிகவரி ஆலோசனைக்குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பிரகாஷ், சீனிவாசன், கேட்டவரம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்.திருநாவுக்கரசு, துணைத்தலைவர் என்.எம்.கணேசன், செயலாளர் சி.வெங்கடாசலம், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத் தலைவர் தீபாசம்பத், மேலாண் இயக்குனர் தேவிபத்மஜா, உதவி இயக்குனர் செந்தில்குமார், துணைத் தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story