ஸ்ரீரங்கம் கோவில் தெப்பத்திருவிழாவுக்காக காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைத்து தண்ணீர் நிரப்ப ஏற்பாடு


ஸ்ரீரங்கம் கோவில் தெப்பத்திருவிழாவுக்காக காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைத்து தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 20 Feb 2018 4:00 AM IST (Updated: 20 Feb 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழாவுக்காக காவிரி ஆற்றில் மணல் திட்டு அமைத்து குளத்தில் தண்ணீர் நிரப்ப சிறப்பு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாலை ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் உள் வீதி உலா வந்தார். 2-வது நாளான நேற்று ஹனுமந்த வாகனத்தில் உலா வந்தார்.

இன்று(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்ச வாகனத்திலும், 21-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 22-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 23-ந் தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் உள் வீதிகளில் உலா வருகிறார். 24-ந் தேதி மாலை நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தெப்பத் திருவிழாவின்போது இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள தோப்புகளில் இருந்து ஆழ்குழாய்கள் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இந்த ஆண்டும் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், கடந்த ஆண்டை போலவே குளத்தில் தண்ணீர் நிரப்ப சிறப்பு ஏற்பாடு செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து அல்லூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே 1.5 கி.மீ. தூரம் வரை மணல் திட்டு அமைக்கப்பட்டு குளத்திற்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி குளத்திற்கு தண்ணீர் வராததால் அணைக்கரையிலிருந்து கூடுதலாக நேற்று முன்தினம் இரவு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணைக்கரை வாய்க்கால் வழியாக வரத்தொடங்கி உள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் அந்த தண்ணீர் ஸ்ரீரங்கம் வந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கோவில் சார்பில் 6 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் குளத்தில் தண்ணீர் நிரம்பி தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பக்தர்கள் உள்ளனர். 

Next Story