பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு


பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2018 12:10 AM GMT (Updated: 20 Feb 2018 12:10 AM GMT)

திருவள்ளூர் அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கபிலர் நகரை சேர்ந்த கிரிதரன் என்பவரது மனைவி சுஜாதா (வயது 44). திருவள்ளூர் அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை சுஜாதா பள்ளியில் இருந்தார்.

அப்போது கல்வி அதிகாரி அனுப்பியதாக கூறி மர்மநபர் ஒருவர் தலைமை ஆசிரியை அறைக்கு வந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குறும்படங்கள் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அந்த நபர் தெரிவித்தார். இதனை நம்பிய சுஜாதா, அவரிடம் அதுகுறித்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த நபர் திடீரென சுஜாதா அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்தார். சுதாரித்துக்கொண்ட சுஜாதா சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதில் சங்கிலி துண்டானது. சங்கிலியின் ஒரு பகுதி மர்மநபரிடமும், மற்றொரு பகுதி சுஜாதாவிடமும் இருந்தது. சுஜாதாவிடம் இருந்த சங்கிலியின் ஒரு பகுதியை பறிக்க மர்மநபர் முயன்றார்.

அதற்குள் அவர் சத்தம் போட்டதால், பள்ளியில் இருந்த ஒரு மாணவர் ஓடிவந்து, மர்மநபரை பிடிக்க முயன்றார். அவரை மர்மநபர் தள்ளிவிட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவர் சங்கிலி பறிப்பு திருடனின் காலை பிடித்து கடித்ததாக தெரிகிறது.

உடனே சங்கிலி பறித்த நபர், கையில் கிடைத்த 6 பவுன் சங்கிலியுடன் பள்ளி அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மப்பேடு போலீஸ் நிலையத்தில் சுஜாதா புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story