ஸ்கூட்டரில் சென்ற பெண், கன்டெய்னர் லாரி மோதி சாவு


ஸ்கூட்டரில் சென்ற பெண், கன்டெய்னர் லாரி மோதி சாவு
x
தினத்தந்தி 21 Feb 2018 4:30 AM IST (Updated: 21 Feb 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

எர்ணாவூர் மேம்பாலம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் கன்டெய்னர் லாரி மோதி உயிரிழந்தார். அங்கு சிக்னல் அமைக்காததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் எர்ணீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஷீர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சமீரா(வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அவர்களை சமீரா தினமும் தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றும், பள்ளியில் முடிந்து வீட்டுக்கு அழைத்தும் வருவார். அவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற குழந்தைகளை அழைத்து வர ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். எர்ணாவூர் மேம்பாலத்தின் அருகில் ரவுண்டானா பகுதியில் திரும்பியபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று அவரது ஸ்கூட்டர் மீது மோதியது.

மோதிய வேகத்தில் சமீரா ஸ்கூட்டருடன் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சமீரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாதவரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(30) என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது.

தற்போது உயிர்ப்பலி வாங்கியுள்ள இந்த ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பல முனைகளில் இருந்தும் வேகமாக வரும் கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு சிக்னல் கம்பங்கள் அமைக்கப்படாததே விபத்துக்கு காரணம். எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story