அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2018 4:15 AM IST (Updated: 21 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

என்ன செய்யப் போகிறோம் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. அரசியல் கட்சி தொடங்குபவர் மாற்றுக் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். எம்.ஜி.ஆரை போன்றவர்கள் அரசியல் கட்சியை தொடங்கும் போது இப்படி யாரையும் சந்தித்து ஆதரவு கேட்டது இல்லை.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடமாக உள்ளது என கூறி இருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். தமிழக போலீசாரின் நடவடிக்கையால் இங்குள்ள ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடுகிறார்கள். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியை மும்பைக்கு சென்று பிடித்து வந்து அவருக்கு தூக்கு தண்டனை பெற்று தந்துள்ளனர். நகைக் கடை கொள்ளை வழக்கில் ராஜஸ்தானுக்கு சென்று வடமாநில கொள்ளையனை மடக்கிப் பிடித்து கொண்டு வந்து நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இல்லை.

சீமான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சரியில்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த ஆட்சியை பற்றி மக்கள் தான் கூற வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் அன்று ஒரு லட்சம் பெண்களுக்கு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த ஆட்சியில் தான் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மு.க.அழகிரி அரசியல் சாக்கடை என்று கூறி இருப்பது அவருடைய கருத்தாகும். சாக்கடையில் இருந்து வந்தவர்கள் இப்படித் தான் கூறுவார்கள். அரசியல் என்பது மக்களுக்கு தொண்டாற்ற கிடைத்த வரமாகும். சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தாக்கல் செய்ய முடியாது. பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது என்று பலரும் ஆருடம் கூறினார்கள்.

கடந்த நிதியாண்டில் மானிய கோரிக்கை, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஓராண்டு முடிந்து தற்போது அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜெயலலிதா சிங்க நிகர் தலைவியாக மக்கள் தொண்டாற்றி வந்தார். அவர் வழியில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. அடுத்த 3½ ஆண்டு இந்த ஆட்சி தொடர்வதோடு, அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதன் பின்னரும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story