மஞ்சூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் இருவாச்சி பறவைகள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்


மஞ்சூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் இருவாச்சி பறவைகள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 20 Feb 2018 9:30 PM GMT (Updated: 20 Feb 2018 8:27 PM GMT)

மஞ்சூர் வனப்பகுதியில் இருவாச்சி பறவைகள் சுற்றித்திரிகின்றன. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தை, தாய்சோலை, கோரகுந்தா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் இந்த வனப்பகுதிகள் லேசாக பசுமை திரும்பியுள்ளது.

வனப்பகுதி பசுமைக்கு மாறி இருப்பதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து உணவு தேடி பறவைகள் இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளது. அரியவகை பறவைகளான இருவாச்சி பறவைகள் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இதை மஞ்சூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் வனப்பகுதியில் நின்று தங்கள் செல்போன் கேமராக்களில் படம் பிடித்து மகிழ்கின்றனர். இந்த பறவைகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

இந்திய வன பகுதிகளில் ஏராளமான பறவைகள் காணப்படுகின்றன. இதில் அரியவகை பறவைகளில் இருவாச்சியும் ஆகும், இப்பறவைகளின் அலகு பெரிதாக உள்ளது. இப்பறவைகள் பறக்கும்போது விமானம் செல்லும் போது எழுப்பும் சத்தம் போல ஒலி எழுப்பும். இவ்வகை பறவைகள் பெரும்பாலும் அடர்ந்த வன பகுதிகளில் உயர்ந்த மரங்களில் வாழும்.

இந்த பறவைகள் இரை தேட தினசரி பல கிலோ மீட்டர் தூரம் சென்று குறித்த நேரத்தில் இரையை சேகரித்து வரும். பெண் பறவைகள் முட்டையிடுவதற்கு முன்பு கூண்டிற்குள் சென்று விடும். இந்த கூண்டின் முகப்பை ஆண் பறவைகள் மண்ணாலும் எச்சத்தாலும் அடைத்துவிடும். பெண் பறவைகள் உணவு அளிப்பதற்கு சிறிய இடம் மட்டும் விட்டு, விட்டு முழுவதுமாக அடைத்துவிடும். பெண் பறவைகள் கூண்டில் இரண்டு முதல் நான்கு முட்டைகள் இட்டு அடைகாக்கும், இந்த இடைபட்ட காலத்தில் ஆண் பறவை, பெண் பறவைக்கு தேவையான உணவை கொண்டு வந்து கொடுக்கும்.

இதன் பிரதான உணவு காட்டுப்பகுதியில் உள்ள கனிகள், இலைகள், பல்லி, பாம்பு உண்ணும். இவ்வகை பறவைகளின் வீடுகள் என்னவென்றால் மரப்பொந்தில் தான் கூடுகள் கட்டும். குஞ்சுகள் பறப்பதற்கு தயாராகும் நிலை இருக்கும் வரை தான் பெண் பறவைகள் கூண்டிலேயே இருக்கும். பின்னர் கூண்டின் முகப்பை பெண்பறவை உடைத்து விட்டு வெளியே வந்துவிடும், பின்னர் குஞ்சுகளை பராமரிக்கும் பணியை ஆண் பறவைதான் மேற்கொள்ளும். குஞ்சுகள் நன்கு வளர்ந்த பின்பு ஆண் பறவைகளுடன் வெளியுலகத்திற்கு வந்து பறக்க கற்று கொள்வதுடன் இரை தேடி சென்று இரையை சேகரிக்கவும் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் இருவாச்சி பறவைகளை பார்க்க உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மஞ்சூர்-ஊட்டி சாலை, காரமடை-மஞ்சூர் சாலைகளில் உள்ள வனப்பகுதியில் நின்று இருவாச்சி பறவைகள் உணவு சேகரித்து பெண் பறவைகளுக்கு கொடுப்பதை ரசித்து செல்கின்றனர். 

Next Story