ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2018 9:45 PM GMT (Updated: 20 Feb 2018 9:16 PM GMT)

கசவனூர் கிராமத்திற்கு குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கசவனூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங் களுக்கும் மேலாக, இங்குள்ள ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதின் காரணமாக குடிநீர் வினியோகம் செயல்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக நெடுந்தூரம் அலைந்து திரிந்து குடிநீரை எடுத்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கசவனூர் கிராம பொதுமக்கள் நேற்று காலை விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் எங்கள் கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை ஆணையர் சுமதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story