கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க வந்த ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க வந்த ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:15 PM GMT (Updated: 20 Feb 2018 9:27 PM GMT)

கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க வந்த ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கடலூர் அருகே ஓட்டேரியில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு கெடிலம் ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணி ரூ.22½ கோடி செலவில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டியுள்ள கடைகள், வீடுகளை இடித்து அகற்றும் பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுப்பாளையம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில், ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் வீடுகளை அகற்றிடவும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அரசு பொதுத்தேர்வு நடக்கும் வரை உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளின் மின்இணைப்பை துண்டிப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் நேற்று புதுப்பாளையத்துக்கு வந்தனர். இது பற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்களுடன், அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி அறிந்ததும் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கண்ணீருடன் கூறுகையில், நாங்கள் இப்பகுதியில் கூலிவேலை செய்து பிழைக்கிறோம், எங்களுக்கு வெகுதொலைவில் மாற்று இடம் வழங்கினால், இங்கே வந்து கூலி வேலை செய்வது சிரமம், எனவே 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மாற்று இடம் தந்தால் நாங்களாகவே வீடுகளை காலி செய்து தருகிறோம் என்று கூறினார்கள். இதை பொறுமையாக கேட்ட சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் பொதுமக்களை சமாதானப்படுத்தி விட்டு கிளம்பி சென்றார்.

அங்குள்ள வீடுகளை இடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசின் உயர் மட்டத்தில் இருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால், முதலில் ஆற்றங்கரையில் இருந்து காலி செய்தவர்களின் வீடுகள் இன்று(புதன் கிழமை) காலை அகற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story