என்.ஏ.ஹாரீஸ் மகனின் தாக்குதல் சம்பவத்தில் போலீசார் சிறிது தாமதமாக செயல்பட்டனர்
என்.ஏ.ஹாரீஸ் மகனின் தாக்குதல் சம்பவத்தில் போலீசார் சிறிது தாமதமாக செயல்பட்டதாக சட்டசபையில் மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுப்பிய என்.ஏ.ஹாரீஸ் மகனின் தாக்குதல் பிரச்சினைக்கு போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி பதிலளிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 10–வது இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 7 சதவீத குற்றங்கள் நடைபெற்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சதவீதம் 5–ஆக குறைந்துள்ளது.‘லைவ் பாண்டு’ நிகழ்ச்சியை நடத்த அரசு தடை விதித்துள்ளது. தெரியாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறலாம். உலகில் எங்குமே குற்றங்களை முழுமையாக தடுக்க முடியாது. குற்றங்கள் இல்லாவிட்டால் கோர்ட்டு, போலீஸ் தேவை இல்லையே? குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளோம்.
பெங்களூரு யு.பி.சிட்டி வணிக வளாகத்தில் கடந்த 17–ந் தேதி இரவு ஓட்டலில் தகராறு ஏற்பட்டுள்ளது. என்.ஏ.ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகனுக்கும், வித்வத்திற்கும் இடையே சிறிய அளவில் பிரச்சினை உண்டாகியது. இதில் வித்வத் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் முடிந்த பிறகு காயம் அடைந்த வித்வத் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு என்.ஏ.ஹாரீசின் மகன் சமரசம் பேசுவதற்காக சென்றார்.தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஹாரீஸ் நலபட்டை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சரியாக தங்களின் பணியை ஆற்ற தவறிய இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். உதவி கமிஷனர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்து உள்ளோம். இந்த வழக்கில் போலீசார் சிறிது தாமதமாக செயல்பட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
கே.ஆர்.புரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்து ஒருவர் கலாட்டா செய்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அரசு தனது பணியை சரியாக செய்கிறது. ஒரு சிறிய சம்பவத்தை வைத்து கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கூறுவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.