முதல்-மந்திரி சித்தராமையா மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினை


முதல்-மந்திரி சித்தராமையா மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினை
x
தினத்தந்தி 21 Feb 2018 4:44 AM IST (Updated: 21 Feb 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிகழ்ச்சிகளில் தங்களை புறக்கணித்ததாக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தனர்.

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ஜி.டி.தேவேகவுடா எழுந்து, முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.

அவர் பேசுகையில், “மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட சித்தராமையா முடிவு செய்துள்ளார். அதனால் அந்த தொகுதிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு எனது ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த தொகுதியில் தற்போது நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எனக்கு அழைப்பு விடுக்காமல் அரசு விழாவை சிலர் மூலம் சித்தராமையா நடத்துகிறார். முதல்-மந்திரியின் மகன் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜையை நடத்தி இருக்கிறார். அப்படி என்றால் நான் எதற்காக எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும். எனது பதவிக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது. அதனால் முதல்-மந்திரிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துள்ளேன். இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

அப்போது இதற்கு ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து பேசுகையில், “கர்நாடகத்தில் பல தொகுதிகளில் இந்த நிலை உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பாதுகாக்க தவறுவது சரியல்ல. இந்த சபை உறுப்பினர்களின் உரிமையை சபாநாயகர் தான் காக்க வேண்டும்“ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சித்தராமையா, “எந்த தொகுதியிலும் எம்.எல்.ஏ.க்களை புறக்கணித்துவிட்டு வளர்ச்சி பணிகளை தொடங்க முடியாது. எனது மகன் கிராமங்களுக்கு செல்வது உண்மை தான். ஆனால் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தது பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை விதிமுறை மீறப்பட்டு இருந்தால் சபாநாயகர் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கட்டும்“ என்றார்.

அப்போது சபாநாயகர் பேசுகையில், “ஜி.டி.தேவேகவுடா கொண்டு வந்துள்ள உரிமை மீறல் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கிறேன். ஒரே நாளில் இந்த அறிக்கையை பெறுவேன்” என்றார். அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய ஜி.டி.தேவேகவுடா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இப்போது சொல்ல வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் நாராயணசாமி எழுந்து உரிமை மீறல் பிரச்சினை ஒன்றை கொண்டு வந்தார். அவர் பேசுகையில், “எனது தொகுதியில் எனக்கே தெரியாமல் சுரேஷ் எம்.எல்.சி. மூலம் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நான் எதற்காக எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும். எனது உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் கொண்டு வந்துள்ள இந்த உரிமை மீறல் பிரச்சினையை அனுமதிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், “எம்.எல்.சி.க்கு நிதி ஒதுக்கக்கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?. இதை தேவை இல்லாமல் பிரச்சினை செய்கிறார்கள்” என்றார். உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ஜி.டி.தேவேகவுடா மற்றும் பா.ஜனதா உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து தர்ணா நடத்தினர். 

Next Story