திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை அரைக்கும் நவீன எந்திரம்


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை அரைக்கும் நவீன எந்திரம்
x
தினத்தந்தி 21 Feb 2018 5:21 AM IST (Updated: 21 Feb 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஓட்டேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை அரைக்கும் நவீன எந்திரத்தை கமிஷனர் (பொறுப்பு) விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

அடுக்கம்பாறை,

வேலூர் மாநகராட்சி பகுதியில் தினமும் சுமார் 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை முன்பு சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

மலை போல் குவிக்கப்படும் குப்பைகளை அகற்றாமல் அந்த இடத்திலேயே தீ வைப்பதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனக்கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பைகளை பிரித்து, உரமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி வேலூர் மாநகராட்சியில் முதற்கட்டமாக 36 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. அங்கு குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயத்துக்கும், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தூளாக்கி தார்சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 இடங்களில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதில் ஓட்டேரி மாநகராட்சி பூங்கா அருகே ரூ.50 லட்சம் மதிப்பில் மக்காத குப்பைகளை அரைக்கும் நவீன எந்திரத்துடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தையும், நவீன எந்திரத்தையும் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) விஜயகுமார் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை அவர் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் மணிவண்ணன், 3-வது மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பாகாயத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடத்தையும் கமிஷனர் (பொறுப்பு) விஜயகுமார் திறந்து வைத்தார். 

Next Story