இளஞ்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளஞ்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி தொடங்கியது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக அரங்கில் இளஞ்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான 3 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ‘இளமையும் ஆரோக்கியமும்’ என்ற தலைப்பில் தொடங்கிய இந்த புத்தாக்க பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி தலைமை தாங்கினார்.
இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவருமான தண்டபாணி வரவேற்றார். பயிற்சியை துணை வேந்தர் முருகன் தொடங்கி வைத்து பேசினார். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ரமணன் சிறப்புரையாற்றினார்.
இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், இளஞ்செஞ்சிலுவை சங்க வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீனாள் பீபி, பல்கலைக்கழக வேதியியல் துறைத்தலைவர் சையத்ஷபி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துறை தலைவர்களும், பேராசிரியர்களும், இதன்கீழ் இயங்கும் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் இளஞ்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். பயிற்சி முகாம் நாளை வரை நடக்கிறது.