சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து கட்டிட பெண் தொழிலாளி பலி


சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து கட்டிட பெண் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 Feb 2018 10:45 PM GMT (Updated: 21 Feb 2018 7:11 PM GMT)

சென்னை தியாகராயநகரில் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் கட்டிட பெண் தொழிலாளி பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை தியாகராயநகர், கோபாலகிருஷ்ணன் தெருவில் கடந்த 20 நாட்களாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமான மேஸ்திரி தங்கராஜ் கட்டிட வேலைக்காக 10 பேரை நேற்று அழைத்துவந்தார். அவர்கள் நேற்று வேலை செய்துகொண்டு இருந்தனர்.

கட்டிடத்தை ஒட்டி 40 அடி நீளம் 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த சுற்றுச்சுவர் நேற்று காலை 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்ததில், அதன் அருகே வேலை பார்த்துக்கொண்டு இருந்த கட்டிட தொழிலாளி அங்கம்மாள்(வயது 53) என்பவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அங்கம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

அங்கம்மாள் திருச்சி மாவட்டம் துறையூர், கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் ஜாபர்கான்பேட்டையில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

காயம் அடைந்த உமா, ராணி, வள்ளி, மாலா, செந்தில், ராணி, காசி ஆகிய 7 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் காசி (55) மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கோடம்பாக்கத்தை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் பிரபு(33), புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டியை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் கார்த்திக் (22) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story