குன்னூர் அருகே லாரியில் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி விழுந்து 2 மாணவிகள் காயம்


குன்னூர் அருகே லாரியில் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி விழுந்து 2 மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 21 Feb 2018 9:15 PM GMT (Updated: 21 Feb 2018 7:20 PM GMT)

குன்னூர் அருகே லாரியில் இருந்து பிளாஸ்டிக் தொட்டி கீழே விழுந்ததில் 2 மாணவிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குன்னூர்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டு இருந்த குடிநீர் தொட்டிகள் கயிற்றால் சரிவர கட்டப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மலைப்பாதையில் லாரி செல்லும் போது அந்த கயிறு லேசாக அவிழ்ந்தது.

குன்னூர் அருகே வெலிங்டன் ஜெயந்தி நகர் அருகே லாரி சென்ற போது திடீரென்று அதில் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி கீழே விழுந்தது. அப்போது சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 2 மாணவிகள் மீது பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி விழுந்ததால் காயம் அடைந்தனர்.

உடனே அங்கு நின்றிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி விழுந்ததில் காயம் அடைந்த தனியார் பள்ளி மாணவிகளான அஸ்வினி(வயது 14), அபிநயா(14) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வெலிங்டன் கண்டோன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி கீழே விழுந்ததில் காயம் அடைந்த 2 மாணவிகளின் மருத்துவ செலவை லாரி உரிமையாளரே ஏற்று கொள்வதாக கூறியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story