கனடா பிரதமரின் காரை பின்தொடர்ந்த 2 பேர் கைது


கனடா பிரதமரின் காரை பின்தொடர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2018 10:32 PM GMT (Updated: 21 Feb 2018 10:32 PM GMT)

மோட்டார் சைக்கிள்களில் கனடா பிரதமரின் காரை பின்தொடர்ந்து சென்ற தாராவியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை மும்பை வந்தார். அப்போது, அவர்கள் விமான நிலையத்தில் இருந்து தென்மும்பையில் உள்ள தாஜ்மகால் ஓட்டலுக்கு காரில் சென்றனர். அன்றைய தினம் இரவு ஜஸ்டின் ட்ருடோவின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடாமல் இருப்பதற்காக விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் ஓட்டல் வரையிலும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டு இருந்தனர்.

இரவு 7.20 மணியளவில் ஜஸ்டின் ட்ருடோவின் கார் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக வந்த வாகனங்கள் என 41 வாகனங்கள் ஒர்லி- பாந்திரா கடல்வழி மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் 2 வாலிபர்கள் பாந்திரா கலாநகர் பகுதியில் இருந்து, அந்த சாலையில் மோட்டார் சைக்கிள்களில் புகுந்துவிட்டனர். இருவரும் அந்த வழியாக சாகசம் செய்தபடி கனடா பிரதமரின் காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பதறிப்போனார்கள்.

இருப்பினும் உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வாலிபர்கள் இருவரும் ஒர்லி- பாந்திரா கடல்வழி மேம்பாலம் வரை வேகமாக வந்துவிட்டனர். அங்கு வைத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தாராவியை சேர்ந்த பகரூதீன் முகமது அன்சாரி(வயது18), முகமது அன்சாரி (20) என்பது தெரியவந்தது.

பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அடுத்த மாதம்(மார்ச்) 3-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story