முதன்மை கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற 2 ஆசிரியர்கள் கைது


முதன்மை கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற 2 ஆசிரியர்கள் கைது
x
தினத்தந்தி 23 Feb 2018 2:30 AM IST (Updated: 22 Feb 2018 9:39 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கலந்தாய்வில் முறைகேடு?

தூத்துக்குடி அருகே உள்ள கட்டாலன்குளத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் செல்வக்குமார். இவர், கடந்த 2017–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு காரணமாக தனக்கு கிடைக்க வேண்டிய இடமாறுதல் தடுக்கப்பட்டு உள்ளது என்றும், உரிய இடமாறுதல் வழங்க வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இதேபோன்று ஆசிரியை சாந்தாவும் பொதுமாறுதல் கலந்தாயிவில் தனக்கு அநீதி அளிக்கப்பட்டதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உண்ணாவிரதம் முயற்சி

இந்த நிலையில் இந்த 2பேரும் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தனர். தங்களுக்கு உரிய இடமாறுதல் வழங்க வலியுறுத்தியும், பொதுமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அந்த அலுவலக வளாகத்தில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 2 ஆசிரியர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனால், முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story