‘ஏர்செல்’ நிறுவன அலுவலகம் 2-வது நாளாக முற்றுகை


‘ஏர்செல்’ நிறுவன அலுவலகம் 2-வது நாளாக முற்றுகை
x
தினத்தந்தி 22 Feb 2018 9:45 PM GMT (Updated: 22 Feb 2018 7:03 PM GMT)

சேவை பாதிப்பு காரணமாக ‘ஏர்செல்’ நிறுவன அலுவலகத்தை நேற்று 2-வது நாளாக வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

கோவை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ நிறுவனத்தின் சேவை முடங்கி உள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் கோவை ஹுசூர் ரோட்டில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் ஏர்செல் நிறுவன அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

இதற்கிடையில் கோவை ஹுசூர் ரோட்டில் உள்ள ஏர்செல் அலுவலகம் முன், ஏர்டெல், வோடா போன், ஐடியா, ஜியோ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிழற்குடைகளை அமைத்து தங்களது நிறுவனத்தின் சிம்கார்டுகளை விற்க தற்காலிக முகாம் அமைத்தனர்.

அவர்களிடம், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை கொடுத்து அந்த நிறுவனங் களின் இணைப்புக்கு மாறி கொண்டனர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர், கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களுக்கு சென்று அந்த சேவையை பெற குவிந்தனர்.

ஹுசூர் ரோட்டில் மற்ற நிறுவனங்கள் முகாம் அமைத்ததால் அந்த பகுதியே செல்போன் பஜாராக மாறியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ‘ஏர்செல்’ நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் கூறிய தாவது:-

செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

எல்லா செல்போன் சேவை நிறுவனங்களை போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை இன்னொரு கம்பெனியில் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டாயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.

‘ஏர்செல்’ நிறுவனத்துக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

ஒரு வேளை சமரச பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தால், மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுடன் கைக்கோர்த்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்கு பெற்று தருவதற்கு முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ (சர்வர்) முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்கு செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ளநிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரை பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம். போர்ட் அவுட் முறையை பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

Next Story