ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகள் 3 பேர் கைது


ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2018 4:45 AM IST (Updated: 23 Feb 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயலில் ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

திருமுல்லைவாயல் பகுதியில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவின்பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீத்தாராம், ஜெய்கிருஷ்ணன், குணசேகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதற்கிடையில் நேற்று காலை திருமுல்லைவாயல்-சோழம்பேடு சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே மாரிமுத்து என்பவரை 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து உஷாரான தனிப்படை போலீசார், திருமுல்லைவாயல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருமுல்லைவாயல் கல்லறை அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்த கனகு என்ற கனகராஜ் (வயது 36), அதே பகுதி பத்மநாபன் நகரைச்சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (25), திண்டுக்கல், திருச்சி ரோடு தீப்பாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார் என்ற பட்டரை சரவணன் (25) என்பதும், இவர்கள் 3 பேரும் பிரபல ரவுடி பினுவின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாங்காடு அருகே நடந்த பினுவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட 75 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது ரவுடி பினு மற்றும் இவர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்காமல் தப்பிச்சென்றதும் தெரிந்தது.

அதன்பிறகு பினு மட்டும் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரும் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் இவர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமுல்லைவாயல் பகுதியில் சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகரைச்சேர்ந்த கூலிப்படை தலைவன் ராதா என்ற ராதாகிருஷ்ணன் என்பவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை பழிக்குப்பழி வாங்க அவரது தரப்பை சேர்ந்த ஆகாஷ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு காரில் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரிந்தது.

ஆகாஷ் கடத்தப்பட்ட காரை போலீசார் விரட்டிச்சென்று அவரை மீட்டனர். அப்போதும் போலீசாரிடம் சிக்காமல் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த கடத்தல் வழக்கில் இவர்களது கூட்டாளி தட்சிணாமூர்த்தி என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலும் இவர்கள் 3 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இவர்களில் கனகு என்ற கனகராஜ் மீது பூந்தமல்லி, குன்றத்தூர், வடபழனி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளன. விக்கி என்ற விக்னேஷ் மீது பூந்தமல்லி, மாங்காடு போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளன. சரவணகுமார் மீது திண்டுக்கல் நகரம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆகிய வழக்குகள் உள்ளன.

கைதான 3 பேர் மீதும் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான ரவுடி பினு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தலைமறைவாக இருந்து வந்த தன்னை கனகுதான் போன் செய்து, “அண்ணா உனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் வா” என்று அழைத்து பிறந்த நாள் ஏற்பாடுகளை செய்ததாக தெரிவித்து இருந்தார். ரவுடி பினு உள்பட 75 ரவுடிகள் கைதாக காரணமாக பிறந்த நாள் ஏற்பாட்டுக்கு மூளையாக செயல்பட்ட கனகு தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

Next Story