கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக வி.பி.தண்டபாணி பொறுப்பேற்றார்


கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக வி.பி.தண்டபாணி பொறுப்பேற்றார்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:15 AM IST (Updated: 23 Feb 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக வி.பி.தண்டபாணி பொறுப்பேற்றார். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய துரிதமாக நடவடிக்கை எடுப்பேன் என்று பேட்டி அளித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக மீன்வளத்துறை இயக்குனர் வி.பி.தண்டபாணி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் புதிய கலெக்டர் வி.பி.தண்டபாணி நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, தாசில்தார்கள் பாலமுருகன், ஜான்சிராணி மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு புதிய கலெக்டர் வி.பி.தண்டபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பேன். அவர்களின் குறைகளை களைவேன். கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் அவர்களின் குறைகளை தெரிவிக்க என்னை சந்திக்கலாம். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய துரித நடவடிக்கை எடுப்பேன். அலுவலக பணியை விட களத்துக்கு சென்று அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வேன். இவ்வாறு கலெக்டர் வி.பி.தண்டபாணி கூறினார்.

கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வி.பி.தண்டபாணி கடந்த 1996-ம் ஆண்டு பண்ருட்டி நகராட்சி ஆணையாளராகவும், அதன்பிறகு திருச்சி மாநகராட்சி ஆணையாளராகவும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக உதவி இயக்குனராகவும், பின்னர் பதவி உயர்வு பெற்று பொன்னேரி சப்-கலெக்டராகவும் பணியாற்றினார். அதன்பிறகு மீன்வளத்துறை இயக்குனராக பணியாற்றி தற்போது கடலூர் மாவட்டத்தின் 19-வது கலெக்டராக வி.பி.தண்டபாணி பொறுப்பேற்றுள்ளார்.

Next Story