கொலை முயற்சி வழக்கு விசாரணை: தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் ஆஜர்


கொலை முயற்சி வழக்கு விசாரணை: தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் ஆஜர்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கைது செய்யப்பட்ட நக்சலைட் காளிதாசை கொலை முயற்சி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தர்மபுரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

தர்மபுரி,

பரமக்குடியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 45). நக்சலைட். இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காளிதாசுக்கு மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை கேரள போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

காளிதாஸ் மீது உள்ள கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக அவரை நேற்று தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கேரள போலீசார் ஆஜர்படுத்தினார்கள். காளிதாசிடம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மணி விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

காளிதாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டபோது கோர்ட்டு வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோர்ட்டில் விசாரணை முடிந்த பின் துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார், காளிதாசை போலீஸ் வேனில் ஏற்றி மீண்டும் கேரளாவிற்கு அழைத்து சென்றனர். 

Next Story