நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மாணவர் அமைப்பினர் சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்புகள் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாணவரணி மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை வரவேற்றார். திராவிடர் கழக நிர்வாகிகள் மாதன், காமராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் மாணவரணி நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர் பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜானகிராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட செயலாளர் பைரோஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுபேதார், மனித உரிமைகள் கட்சி மாநில செயல்தலைவர் துரைராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

ரத்து செய்ய கோரிக்கை

ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வி, கருபாலன், கதிர், தமிழ்ச்செல்வன் உள்பட மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story