வாலிபரின் தலையில் இருந்த 1¾ கிலோ கட்டி அகற்றம்


வாலிபரின் தலையில் இருந்த 1¾ கிலோ கட்டி அகற்றம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:29 AM IST (Updated: 23 Feb 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நாயர் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் வாலிபரின் தலையில் இருந்த 1¾ கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

மும்பை,

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சாந்த்லால்(வயது31). இவருக்கு தலையில் மிகப்பெரிய கட்டி உருவானது. கட்டியால் அவருக்கு கடும் தலைவலி இருந்து வந்தது. இதற்காக சாந்த்லால் வாரணாசி, அலகாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். ஆனால் அங்கு அந்த கட்டியை அகற்ற முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி கட்டியின் காரணமாக சாந்த்லாலுக்கு திடீரென கண் பார்வை பறிபோனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் கடந்த 14-ந்தேதி சாந்த்லால் தலையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்.

சுமார் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாந்த்லாலின் தலையில் இருந்த 1¾ கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றினர். பின்னர் அவர் 3 நாட்களுக்கு தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டார். தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் திரிமூர்த்தி நட்கர்னி கூறுகையில், “சாந்த்லால் சிகிச்சைக்கு வந்தபோது, அவரது தலைக்கு மேல் மேலும் ஒரு தலை இருப்பது போல இருந்தது. அவரது தலை நாளங்கள் விரிவடைந்து இருந்தன.

சிகிச்சைக்கு வரும் போது அவர் பார்வை இழந்து இருந்தார். தற்போது அவருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்துள்ளது. அறுவை சிகிச்சையின் போது அவருக்கு 11 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது” என்றார். 

Next Story