தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்


தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:15 AM IST (Updated: 24 Feb 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை ஏல மையத்தில் தேயிலைத்தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று தேயிலை விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.

தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு முன்னிலை வகித்தார். தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்வது போன்று, தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஏல மையத்துக்கு கொண்டு வரப்படும் தேயிலைத்தூளுக்கு ஏலம் எடுப்பது தொடர்பாக கிலோ ஒன்றுக்கு ரூ.150 என்று தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த விலைக்கு மேல் தான் தேயிலைத்தூளை ஏலம் விட வேண்டும்.

குறிப்பிட்ட விலைக்கு தேயிலைத்தூள் ஏலம் எடுக்க ஏஜெண்ட்டுகள் மற்றும் வியாபாரிகள் முன்வராவிட்டால் தமிழக அரசின் வாணிபக்கழகம் தேயிலைத்தூளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் தங்களது நிலத்தில் தேயிலை செடிகளை கவாத்து செய்தால், குறிப்பிட்ட பரப்பளவுக்கு பச்சை தேயிலை வரத்தை சராசரியாக கணக்கிட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் தேயிலை வாரியம் மானியம் வழங்குகிறது.

அதன் காரணமாக அங்கு தரமான பச்சை தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதே போன்று நீலகிரி மாவட்டத்திலும் செயல்படுத்த வேண்டும். தற்போது உள்ள நிலையில் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலை வாரியம் பச்சை தேயிலைக்கு அறிவித்த விலையை சில இன்கோ தேயிலை தொழிற்சாலைகளில் வழங்கப்படுவது இல்லை.

இந்த தொகையை விரைவாக வழங்க வேண்டும். இன்கோ தேயிலை நிர்வாகம் தனியார் தொழிற்சாலை தேயிலைத்தூள் விலையை விட குறைவாக விற்பனை செய்கிறது. இந்த நடவடிக்கை விவசாயிகளை பாதிப்பதாகும். எனவே, தனியார் தேயிலை தொழிற்சாலையின் தேயிலைத்தூள் விற்பனையை போன்று விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேயிலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இன்கோ சர்வ் உயர் அதிகாரிகள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கலெக்டரிடம் தெரிவித்து உள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை கொள்முதல் செய்யும் மையங்களில் உள்ள தராசு மற்றும் எடைக்கருவிகளை ஆய்வு செய்து, நவீன எலெக்ட்ரானிக் தராசுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை தேயிலை விலை சம்பந்தமாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். விவசாய சங்க பிரதிநிதிகள் பெள்ளி, போஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story