பொருளியல்-புள்ளியியல் துறையால் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள்


பொருளியல்-புள்ளியியல் துறையால் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பொருளியல்-புள்ளியியல் துறையால் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்பபடுத்தப்பட்டு வருகின்றன என்று அரசு முதன்மை செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

நாகையில் புள்ளியல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் இறையன்பு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த துறையும் தங்களுடைய சாதனைகளை பெருமைப்படுத்தாமல் உண்மை நிலையை சொல்லவேண்டும். அப்போது தான் துல்லியமான புள்ளி விவரம் தெரியவரும். துறை சார்ந்த புள்ளி விவரங்களை மற்ற துறைகளிடம் கூறுவதன் மூலம் பணிசுமையை குறைக்க முடியும். ஒன்றுபட்டு செயல்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

நாகை மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டத்தின் கீழ் வயல்களில் சாகுபடி செய்யும் பயிர் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் விவசாய நிலங்கள் காப்பீடு செய்யப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

பயிர் மேம்பாட்டு திட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, புதுடெல்லியில் உள்ள தேசிய கட்டிட நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. தேசிய மாதிரி ஆய்வுத்திட்டத்தின் கீழ் புள்ளி விவரங்கள் மற்றும் நுகர்வோர் செலவின விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநில கணக்கு திட்டத்தின் கீழ் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் கடலூர் மண்டல புள்ளியியல் துறை இணை இயக்குனர் கமலக்கண்ணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறை தலைவர் ரவிச்சந்திரன், நாகை வேளாண்மை இணை இயக்குனர் விஜயகுமார், ஐந்து மாவட்ட புள்ளியியல் துறை இயக்குனர்கள் மற்றும் புள்ளியில் வல்லுனர்கள் உள்பட மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story