பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை: தலைமறைவாக இருந்த காவலாளி, நண்பருடன் கைது


பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்து கொலை: தலைமறைவாக இருந்த காவலாளி, நண்பருடன் கைது
x
தினத்தந்தி 24 Feb 2018 4:30 AM IST (Updated: 24 Feb 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலாளி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரித்தீவிராஜ் (வயது 46). இவருடைய மனைவி செலினா வளர்மதி (40). இவர்களுக்கு கரன்சஞ்சய் (15) என்ற மகன் உள்ளார். கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் செலினா வளர்மதி தனது மகனுடன் எரசக்கநாயக்கனூரில் தந்தை வீட்டில் வசித்து வந்தார். உத்தமபாளையத்தில் ஒரு பள்ளியில் கரன்சஞ்சய் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

அவனை தினமும் பள்ளிக்கு செலினா வளர்மதியின் சித்தி மகன் லாரன்ஸ் (34) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவார். இந்த நிலையில் கடந்த 22.10.2017-ந் தேதி அன்று கரன்சஞ்சயை பள்ளியில் விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த லாரன்சை பிரித்தீவிராஜ் வழிமறித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரித்தீவிராஜ் கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து லாரன்ஸ் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிரித்தீவிராஜ் தப்பியோடி விட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் உத்தமபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் பிரித்தீவிராஜ் தந்தை தங்கமுத்து சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதனை பார்ப்பதற்காக வந்த பிரித்தீவிராஜை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்தீரிஸ்கான் தலைமையில் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், என் மனைவியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். இதுகுறித்து கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மனைவியை சந்தித்து பேசி சேர்ந்து வாழலாம் என்று நினைத்து அவருடைய வீட்டுக்கு சென்றேன். அப்போது லாரன்ஸ் எனது மனைவியை பார்க்க விடாமல் தடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தேன். பின்னர் கோவையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு இருந்து தந்தை கட்டும் வீட்டை பார்ப்பதற்காக வந்த போது போலீசாரிடம் சிக்கி கொண்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த கொலை வழக்கில் பிரித்தீவிராஜுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ராஜேஸ்குமார் (36) என்பவரையும் கைது செய்தனர். 

Next Story