வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது


வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 23 Feb 2018 10:30 PM GMT (Updated: 23 Feb 2018 8:50 PM GMT)

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வாழைத்தார்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதில் லாரி டிரைவர் உள்பட 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம், உத்தமர்சீலியை அடுத்துள்ள கிளிக்கூடு கிராம பகுதியில் உள்ள ஒரு வாழை தோட்டத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடை செய்யும் வேலை நடைபெற்றது. இதில் 5 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அறுவடையில் கிடைத்த 150 வாழைத்தார்களை ஒரு மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் மணல்திட்டு குறுக்கு பாதை வழியாக லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

லாரியை டிரைவர் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த தங்கமணி (வயது 28) ஓட்டினார். வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் லாரியின் பின்புறம் அமர்ந்திருந்தனர். லாரி அதிக சுமையுடன் சென்றதால் மணல்திட்டு பாதை சரிந்து லாரி உருண்டோடி அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. அப்போது லாரியில் இருந்த டிரைவர் உள்பட 14 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய தொழிலாளர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் குறுகிய நேரத்திற்குள் நீச்சல் அடித்து தண்ணீருக்கு மேலே வந்தனர். இதனால் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிளிக்கூடு மற்றும் உத்தமர்சீலி கிராம மக்கள் அங்கு வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story