பூட்டி கிடக்கும் மனு எழுதும் கூடத்தை தினந்தோறும் திறக்க வேண்டும்


பூட்டி கிடக்கும் மனு எழுதும் கூடத்தை தினந்தோறும் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:09 AM IST (Updated: 24 Feb 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பூட்டி கிடக்கும் மனு எழுதும் கூடத்தை தினந்தோறும் திறக்க வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம்.

இதனால் திங்கட்கிழமை தோறும் வழக்கத்தை விட மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளதால் தினந்தோறும் அரசு அலுவலர்கள், கட்சிபிரமுகர்கள், பொதுமக்கள் என கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது குறைகளை எழுத இடவசதி இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே அமர்ந்து சிரமப்பட்டவாறு மனுக்களை எழுதி வந்தனர்.

இதை அறிந்த கலெக்டர் பொதுமக்கள் மனுக்களை எழுத ஏதுவாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கட்டிடத்திற்கு அருகிலேயே மனுக்களை எழுதும் கூடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

இப்போது பொதுமக்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். அந்த மனு எழுதும் கூடத்தை அதிகாரிகள் குறை தீர்க்கும் நாள் நடைபெறும் திங்கட்கிழமை மட்டும் திறந்து வைக்கின்றனர். மீதமுள்ள நாட்களில் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாதவாறு பூட்டு போட்டு வைத்துள்ளனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் அந்த மனு எழுதும் கூடத்தை பயன்படுத்த முடியாமல் கலெக்டர் அலுவலக சுவர்களின் ஓரம் அமர்ந்து சிரமப்பட்டவாறு மனுக்களை எழுதி வருகின்றனர்.

எனவே திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் திறந்து பயன்பாட்டிற்கு விட்டு மற்ற நாட்களில் பூட்டு போட்டு மூடிவைப்பதை கைவிட வேண்டும்.

பொதுமக்களின் நன்மைக்காக அந்த மனு எழுதும் கூடத்தை தினந்தோறும் திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story