சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் முதல்-மந்திரி பேட்டி


சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் முதல்-மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2018 5:37 AM IST (Updated: 24 Feb 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடையே தற்போது சுமுகமான உறவு இல்லை. மத்திய, மராட்டிய அரசுகள் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகளை விட மோசமாக சிவசேனா வசைபாடி வருகிறது. இதற்கு பா.ஜனதாவும் பதிலடி அளித்து வருகிறது.

இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சி இனி வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் பிரிந்திருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் கூடி பேசி, இனி வரும் தேர்தல்களை இணைந்து சந்திப்பதாக அறிவித்துள்ளனர். இது பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவரிடம் சிவசேனா உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

எங்களை குறித்து விமர்சிக்கும் சிவசேனா கட்சியை சார்ந்த எவரின் கருத்தையும் நான் கேட்கவும் இல்லை, படிக்கவும் இல்லை. காரணம் யார் என்ன சொன்னாலும் கடைசியில் அங்கு முடிவு எடுக்க வேண்டியவர் (உத்தவ் தாக்கரே) தான். உத்தவ் தாக்கரேவுடன், எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நான் தொடர்ந்து அவரை சந்தித்து பேசி வருகிறேன்.

நாங்கள் ஒன்றாக தேர்தலை சந்திப்போம் என்று நம்புகிறேன். நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்து செயல்பட தயாராக இருக்கிறோம். இல்லாவிட்டாலும் தனித்து செயல்படும் உத்வேகத்துடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story